யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் சுமார் 20 வருடங்களின் பின்னர் நேற்று திங்கள் கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1990 ஆண்டு முதல் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இப்பாடசாலை தனது சொந்த இடத்தில் இயங்கமுடியாத சூழ்நிலை காணப்பட்டது.
இதனால் 1991 ஆம் ஆண்டு வரை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையிலும் அதன் பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் இயங்கி வந்தது.
ஆனால் 1995 ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் 1996 முதல் உரும்பிராயில் உள்ள தனியார் காணி ஒன்றில் இன்று வரை இயங்கி வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 28 ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாடசாலை விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் பாடசாலையை மீண்டும் தற்காலிகமாக ஒழுங்கமைத்து புனரமைக்க வேண்டியிருந்த காரணத்தால் கற்பித்தல் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பமாகவில்லை.
பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், இராணுவத்தினரும் இணைந்து பாடசாலை ஒழங்கமைப்பு பணிகளை மேற்கொண்ட பின்னர் நேற்றைய தினம் தரம் 10, க.பொ.த சாதாரண தரம் , க.பொ.த உயர்தர வகுப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் 450 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இடப்பற்றாக்குறை காரணமாக 10 ஆம் ஆண்டுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக உரும்பிராயில் உள்ள தற்காலிக பாடசாலையிலேயே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment