Wednesday, October 6, 2010

பாழடைந்து போயுள்ள வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம்; பாடசாலையின் நிலை கண்டு கண்ணீர் விட்டுக் கதறியழுத மாணவர்கள்!


யாழ். வசாவிளான் பகுதியில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பாழடைந்து புதர்கள்,பற்றைகளுடனும், சிதிலமடைந்து போயிருக்கும் கட்டிடங்களுடனும் பழைய கால பிரமிட்டுக்களைப் போல் காட்சியளிக்கிறது.


முதலில் சென்று பாடசாலையை பார்த்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். இப்படித் தெரிவித்தார் பாடசாலையின் அதிபர் கனகராஜா.



வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம் கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாடசாலையின் அதிபர் கனகராஜா தமிழ் சி.என்.என் செய்திப்பிரிவுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலிருந்து முக்கியமான விடயங்களைத் தொகுத்து தருகின்றோம்.


வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பகாலம் தொட்டே ஏராளமான இடபெயர்வுகளை தொடர்ச்சியாகச் சந்தித்து வந்துள்ளது. பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்தாலும் உரும்பிராயில் உள்ள தனியார் காணியொன்றிலேயே பல வருடங்களாக இயங்கி வருகின்றது.

மிகக் குறுகிய இடத்தில் மிக நெருக்கமான வகுப்பறைகளுடன் 12 பரப்புக் காணியில் 1352 மாணவர்களுடன் ஒரு சிறைச்சாலை அல்லது அகதி முகாம் போலவே தற்போது இயங்குகின்றது. இனி வரப் போகின்ற பருவ மழைக் காலங்களில் மிகவும் சிரமம். வகுப்பறைகளில் வெள்ளம் புகுந்து விடும்...


ஆனால் வசாவிளானில் உள்ள பாடசாலையின் காணியோ 240 பரப்பு... யாழ் மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு காணியைக் கொண்ட பாடசாலையாகவும் பெரிய விளையாட்டு மைதானத்தைக் கொண்ட பாடசாலையாகவும் முன்னொரு காலத்திலேயே திகழ்ந்தது...

அந்த நிலை மீண்டும் விரைவில் வர வேண்டும்... இப்படியானதொரு சூழ்நிலையிலேயே கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது... படைத் தரப்பினரால் பாடசாலை சொந்த இடத்திற்க்குச் சென்று இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அன்றையதினம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலைச் சமூகமே மிகப்பெரிய சந்தோசத்தில் தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக உணர்ந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அரச தரப்பினர் பாடசாலையை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்போவதாக தெரிவித்தார்கள்.

அதாவது செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி மீளத் திறப்பு விழா இடம்பெற்றது. இதில் அரச தரப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

வைபவ ரீதியாக பாடசாலை கையளிக்கப்பட்டு விட்டாலும் மிகப்பெரிய கவலை என்னவென்றால் துரதிஷ்டவசமாக தொடர்ச்சியாக பாடசாலையினை அங்கே நடாத்த முடியாமல் போய் விட்டது. ஒரு வகுப்பறை கூட ஒழுங்காக இல்லை.

குடிதண்ணீர் வசதி, மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட அங்கே இருக்கவில்லை. உண்மையிலேயே 1352 மாணவர்களுக்கும் 48 வகுப்பறைகள் தேவையாக உள்ளது.

வருகின்ற ஜனவரி மாதத்திற்க்கிடையில் சொந்த இடத்திற்கு பாடசாலையைக் கொண்டு செல்வதில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகமே முனைப்பாக இருக்கிறது. ஆனால் பாடசாலையின் நிலையோ வேறாக உள்ளது.

கட்டிடங்கள் எல்லாமே சேதமடைந்து பாழடைந்து போயுள்ளது. பற்றைகளும் புதர்களும் மண்டிக்கிடக்கிறது. பழைய காலப் பிரமிட்டுக்கள் போலக் காட்சியளிக்கின்றது. பாடசாலையைச் சென்று பார்த்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

எப்படியாவது பாடசாலையை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பாடசாலை சமூகத்தோடு சேர்ந்து பழைய மாணவர் சமூகமும் இணைந்து பாடசாலையைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

அப்போது தான் வேகமான பிரதிபலனை நாம் அனுபவிக்க முடியும். எவ்வளவு வேகமாக சொந்த இடத்தில் சென்று இயங்க வேண்டுமோ அவ்வளவு வேகமாக இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைச் சமூகம் எடுத்து வருகின்றது.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் பழைய மாணவர் சமூகம் தான் அதற்க்கான நிதியுதவிகளைத் தந்து உதவ வேண்டும். ஒவ்வொரு கட்டிடத்திற்க்குமான திட்டமிடல்கள் தயார் நிலையில் உள்ளன.

பணம் கையில் கிடைத்ததும் அபிவிருத்தி வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும். முழுமையான நேர்காணலையும் கேட்பதற்கு ஒலிப்பதிவைக் கேளுங்கள்

நன்றி: http://www.tamilcnn.com

No comments:

Post a Comment