யாழ் குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகிய வலிகாமம் வடக்கில் உள்ள வசாவிளான் மகாவித்தியாலயம் இருபது வருடங்களுக்குப் பின்னர் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தப் பாடசாலை இடம்பெயர்ந்த நிலையில் உரும்பிராய் பகுதியில் தனியார் காணியொன்றில் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிப்பாரற்று கிடந்த இந்தப் பாடசாலையில் வகுப்பறைகளோ வேறு அடிப்படை வசதிகளோ இல்லையென கூறும் அந்தப் பாடசாலையின் அதிபர் கந்தையா கனகராஜா அந்தப் பிரதேசம் காடாக காணப்படுவதாகத் தெரிவித்தார்.
பாடசாலை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், பழைய இடத்தில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குக் குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களாவது எடுக்கும் எனவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகள் பல ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பாடசாலையின் அவசர திருத்த வேலைகளுக்கென வடமாகாண ஆளுநரினால் 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலையின் புனரமைப்பு பணிகளுக்கென வேறு நிதியுதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment