Wednesday, November 30, 2011

தீயுடன் சங்கமமாகிய சமூகப் போராளி!


"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்" என்று "பணம் படைத்தவன்" என்ற திரைப்படத்தில் பாடல் வரிகளை அழகாக எழுதி இருப்பார் வாலி. அந்த வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் வசாவிளான் மத்திய மகாவித்தியாலய முன்னாள் அதிபரான ஆ. சி. நடராஜா அவர்கள்.

உண்மையில் அதிபர் என்ற சொல்லுக்கு இலக்கணமே அவர் தான். ஒரு அதிபர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணம் அவர். ஆசிரியராக, அதிபராக, யாழ். தினக்குரல் பத்திரிகையில் பொதுமுகாமையாளராக, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத் தலைவராக பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார்.

ஒரு சமூகத்துக்காக உழைக்கும் உன்னதமான போராளியின் இழப்பை தாங்க முடியாத வேதனையில் உள்ளது தமிழினம்.

கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை நோய்வாய்ப்பட்ட நிலையில் உரும்பிராயில் உள்ள அவரது வீட்டில் காலமானார். நடராஜா அவர்களின் பூதவுடல் ஏராளமானோரின் கண்ணீர்க் கதறல்களுக்கு மத்தியில் இன்றைய தினம் அக்கினியோடு சங்கமமாகியது. இறுதி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மேல் எப்போதும் மிகுந்த அன்புடன் இருப்பார். பாடசாலையை தன்னுடைய சொந்த வீடாக நினைத்து அதற்காக கடுமையாக உழைத்தவர். பாடசாலை தனது இரண்டாவது மனைவி என்று எப்போதும் சொல்லுவார்.
வசாவிளானிலிருந்து 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பாடசாலை இடம்பெயர்ந்த நேரத்தில் துணிச்சலாக உரும்பிராயில் ஒரு தனியார் காணியில் கொட்டில்கள் போட்டு மாணவர்களை கல்வியில் பின்தங்க விடாமல் நடத்திக் காட்டியவர். எத்தனையோ இடப்பெயர்வுகளை பாடசாலை சந்தித்தாலும் கல்வியில் சிறு தொய்வு கூட என்றுமே அனுமதித்ததில்லை. எடுக்கும் தீர்க்கமான முடிவுகளால் சிறந்த நிர்வாகியாக அறியப்பட்டவர்.

இவரது காலம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பொற்காலம் என்றே கூறலாம். இவரது காலத்தில் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் படிப்பிலும், விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியமை குறிப்பிடத்தக்கது. அவரிடம் படித்த மாணவர்கள் இன்று உலகெங்கும் பல்வேறு துறைகளில் பட்டொளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் யாழ் தினக்குரல் பத்திரிகையின் பொது முகாமையாளராக பணியாற்றி வந்தார். அங்கும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் வளர்ச்சிக்கும் ஏழைமக்களின் துயர் போக்கவும் கடுமையாக உழைத்தார். வன்னியில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக

"தினக்குரலின் கருணைப்பாலம்" எனும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து இலட்சக்கணக்கில் உதவிகள் சென்று சேர உதவி புரிந்தார்.

இறுதி நாட்களை சொந்த ஊரான குரும்பசிட்டியில் கழிக்கவே விரும்பினார். ஆனால் மீள்குடியேற்றம் சாத்தியமாகாததால் ஐயாவின் கனவு துரதிஷ்டவசமாக கைகூடவில்லை. பலருக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

நாட்டுக்காகவே வாழ்ந்த ஐயாவின் இழப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மொத்தத்தில் பாடசாலை மூலம் மாணவர்களுக்கும், பத்திரிகை மூலம் மக்களுக்கும் தொடர்ச்சியாக பணியாற்றிய ஒரு உன்னதமானவரின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத வேதனையில் உள்ளது தமிழ் சமூகம்.

(படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின் மேல் மவுசை வைத்து கிளிக் செய்யவும்)










பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த சேவையாளன்!

குரும்பையூர் பெற்றெடுத்த குணம் குன்றா
குவலயம் போற்றும்
வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின்
உயர் சொத்து
எம்மை விட்டு பிரிந்த செய்தி கேட்டு
ஏங்கித் தவிக்கிறது
எம் உள்ளங்கள்...

நிமிர்ந்த நடை
நேர்கொண்ட பார்வை
ஆக்கம், ஆளுமை, அன்பு, அறிவுடைமை
அத்தனையும் ஒருங்கு சேரப் பெற்ற
கல்வி உலகின் கலங்கரை விளக்கே...

உயிருள்ள காலம் வரை
ஆ. சி நடராஜா என்ற உங்கள் அழகிய
நாமத்துக்கு எம் நெஞ்சம் தலை வணங்கும்...

உங்கள் மேல் நாம் வைத்த
உண்மை அன்பின் மீது ஆணை ஐயா
அதிபர் என்ற சொல்லுக்கு அகராதியில் அர்த்தம் தேடினோம்
கண்டு பிடிக்க முடியவில்லை...

இவரிடம் கண்டு கொண்டோம் அதனால் அக மகிழ்ந்தோம்...
பதவி என்ற அந்தஸ்தைப் பாவித்து
பல அராஜகங்களை அரங்கேற்றும்
இத்தேசத்தில் பண்பு நெறி தவறாமல்
பாங்குடனே சேவையாற்றிய வித்தகரே...

பத்திரிகைத் துறை வளர்ச்சியில்
பல்திசையும் போற்ற
நீங்கள் பெற்ற பக்குவமோ
சொல்லில் அடங்காதது...

ஆதரவற்ற ஏழை மக்களை அரவணைத்து
கருணைப்பாலம் மூலம் கரங் கொடுத்து
எத்தனை இடர் வந்தபோதும்

இடப்பெயர்வால் அடுத்தடுத்து
இடம் மாறிச் சென்ற போதும்

கல்லூரியின் தனித்துவத்தை
கட்டிக் காத்த பெருந்தகையாளனின்
காலை மாலை நேரம் பாராது
கல்வி, சமூச சேவையில்
முன்மாதிரியாகத் திகழ்ந்த
ஒப்பற்ற மனத்தினனை
சத்தமில்லாமல் தழுவிச் சென்ற
அந்தக் காலனும் ஓர் சதிகாரனோ...

நாடகத்தில் நல்ல நடிகனாய்
விளையாட்டில் யாவரும் மெச்சிடும் வீரனாய்
கடமை தவறாத கண்ணியவனாய்
நீண்டதோர் சரித்திரம் படைத்த
காவிய நாயகனே...

இருவிழிகள் நீர் ததும்ப விடை தந்தோம்
பூச்சியத்துக்குள் இராச்சியம் அமைத்த
உங்களின் ஆன்மா
இறைவனின் பொற்பாதங்களில்
சாந்தியடைய பெற பிரார்த்திக்கிறோம்...

(குறிஞ்சிக்கவி செ. ரவிசாந் - வயாவிளான் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவன்)