Monday, November 4, 2013

யாழ். வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் எழுச்சியுடன் இடம்பெற்ற ஒளி விழா நிகழ்வுகள் (Photos)

யாழ்ப்பாணம் வசாவிளான் பிரதேசத்தில் அமைந்துள்ள வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் இவ் வருடத்துக்கான ஒளி விழா நிகழ்வுகள் 04.11.2013 திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றன.

கல்லூரி அதிபர் வே.த.ஜயந்தன் தலைமையில் ஆ.சி.நடராஜா கலையரங்கத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.இராயப்பு யோசேப் ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்ததோடு உரையுமாற்றினார்.

 சிறப்பு விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் வருகை தரவில்லை. எனினும் அவரால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்தி கல்லூரி ஆசிரியர் ஒருவரினால் வாசிக்கப்பட்டது.

 மேற்படி ஒளி விழா நிகழ்வில் கௌர விருந்தினராக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா கலந்து கொண்டதுடன் உரையுமாற்றினார். இந் நிகழ்வின் போது அமெரிக்கன் மிஸன் தலைவர் அருட்பணி ஈமனாக் புனிதராஜா, அருட்பணி இ.ராஜ்குமார், உரும்பிராய் பங்குத் தந்தை யூட் நிக்சன் மற்றும் பங்குத் தந்தை நிக்சன் கொலின்,அமெரிக்கன் மிசனரி யூலியனா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

 முதலில் விருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் பான்ட் வாத்திய அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கீதம் முழங்க தேசியக் கொடி,பாடசாலைக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன. அடுத்து விருந்தினர்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் வைபவம் இடம்பெற்றது. தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் மேடையை அலங்கரித்தது. இயேசு பாலனின் பிறப்பைக் கூறும் வகையில் அமைந்த வில்லுப்பாட்டு,நாடகம் என்பன இடம்பெற்றன.

இறுதியாக நத்தார் தாத்தா வருகை நன்றி கூறல் என்பவற்றுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றது. மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் கல்லூரி சார்பாகப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமொன்றும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மன்னார் ஆயர் உள்ளிட்ட குழுவினர் அங்கு இடம்பெற்ற மதியபோசன நிகழ்விலும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: செய்தி, படங்கள் - செ. ரவிசாந்




















No comments:

Post a Comment