Wednesday, November 10, 2010

கல்விச் சுற்றுலா

வயாவிளான் ம .ம .வித்தியாலயத்தின் மாணவர்கள் சென்ற வருட நடுப்பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றார்கள். கல்விச் சுற்றுலா சென்ற மாணவ மாணவிகளை இங்கு புகைப்படத்தில் காணலாம்.

Wednesday, October 20, 2010

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு பொருளாதார அமைச்சு 5 இலட்சம் ரூபா உதவி!

வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு பொருளாதார அமைச்சு 5 இலட்சம் ரூபா உதவி!

20  வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ள வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதித் திட்டப் பணிப்பாளர் ச. குகதாஸ் தெரிவித்தார். 


வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பிராத்தனை மண்டபத்தை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 688 ஆயிரத்து 260 ரூபாவும், வகுப்பறை மற்றும் அலுவலகத்தைப் புனரமைப்பதற்கு ஒரு இலட்சத்து 845 ஆயிரத்து 285 ரூபாவும், ராமசாமி மண்டபத்தைத் திருத்துவதற்கு ஒரு இலட்சத்து 408 ஆயிரத்து 623 ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 




மொத்தமாக 4 இலட்சத்து 942 ஆயிரத்து 168 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதெனவும், இந்த வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




அபிவிருத்தியை மேற்கொள்ளாது பிரமாண்டமான நிகழ்வு எதற்கு? - வயாவிளான் ம.ம.வி.குறித்து ஜனாதிபதி கேள்வி

வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத் தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படா மல் அப் பாடசாலையின் கையளிப்பு நிகழ்வை பிரமாண்டமாக ஏற்பாடு செய்தது எதற்காக என ஜனாதிபதி மகிந்த ராஜபக்  கேள்வி எழுப் பினார்.


வடக்கு மாகாண அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று வவுனியா ஜோசப் முகாமில் இடம்பெற்றது.அதன்போது வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் அபிவிருத்தி குறித்து கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.


இதற்குப் பதிலளித்த செயலாளர், பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்கென 6.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது எனப் பதிலளித்தார்.இதனையடுத்து குறுக்கிட்ட ஜனாதிபதி, பாடசாலையை கையளிக்கும் நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.எனினும் அபிவிருத்திப் பணிகள் மேற் கொள்ளப்படவில்லை எனத் கூறுகிறீர்களே எனத் தெரிவித்து வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தை கையளிக்கும் நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் காண்பித்தார்.


நன்றி
செய்தி:-  வலம்புரி
 

Saturday, October 16, 2010

ஒரு பழைய மாணவனின் உள்ளக்குமுறல்












உலகெங்கும் பல்வேறு துறைகளிலும் பட்டொளி வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அன்பான பழைய மாணவர்களே, வசாவிளானில் தனது சொந்த இடத்தில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பாழடைந்து சிதைவடைந்து போய் காடு மண்டிக் கிடக்கிறது. முன்னைய காலங்களில் யாழ். மாவட்டத்திலேயே சிறந்ததொரு பாடசாலையாக விளங்கிய எங்கள் பாடசாலை இன்று அதன் அழகிய கல்விச் சூழலே முற்றிலும் மாறி விட்டது... பார்க்குமிடமெல்லாம் இடிந்து அரைகுறையாகவுள்ள கட்டிடங்கள், பற்றை மண்டிய புதர்களுக்கு மத்தியில் சோபையிழந்து போய் இருக்கிறாள் எங்கள் கல்வித்தாய்... பாடசாலைச் சமூகத்தின் அதி தீவிர முயற்சியால் இன்று பாதி மாணவர்களுடன் இடிந்து குறையாகவுள்ள கட்டிடத்தில் சொந்த இடத்தில் இயங்குகின்றது... எங்களின் பாடசாலை மீண்டும் புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்பதற்கு பழைய மாணவர்களாகிய உங்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கிறது பாடசாலைச் சமூகம்... தயவு செய்து உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்... பாடசாலைக்கு நேரடியாக உதவுங்கள்... எங்களின் அதிபருடன் பேசி பிரச்சனைகளை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்... எமது பாடசாலையின் தொலைபேசி இலக்கம் 0094 213 734 013. இந்த இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி உங்கள் பாடசாலையின் இன்றைய இக்கட்டான நிலைமையினை அறிந்து கொள்ளுங்கள்... மழை வெள்ளங்கள், இட நெருக்கடிகளுக்கு மத்தியில் எங்களைப் போல கஷ்டப்படாமல் நாளை வரும் தலைமுறையாவது தனது சொந்த இடத்தில் எந்தப் பிரச்சினையில்லாமல் சுதந்திரமாகக் கல்வி கற்கட்டும்... பாடசாலையை மீள நிர்மாணிப்பதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் உதவி நிச்சயமாகத் தேவை.... பல அறிஞர் பெருமக்களை உருவாக்கிய எங்கள் பாடசாலை இடிவிழுந்து எல்லாமிழந்து இருக்கிறது.. நாளை இது நிமிரும் மீள அழகொளிரும்...

அன்புடன்,
பழைய மாணவன்...

Monday, October 11, 2010

யாழ். வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்!


யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் கல்விச் செயற்பாடுகள் சுமார் 20 வருடங்களின் பின்னர் நேற்று திங்கள் கிழமை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


1990 ஆண்டு முதல் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இப்பாடசாலை தனது சொந்த இடத்தில் இயங்கமுடியாத சூழ்நிலை காணப்பட்டது.


இதனால் 1991 ஆம் ஆண்டு வரை புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலையிலும் அதன் பின்னர் உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் இயங்கி வந்தது.

ஆனால் 1995 ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் 1996 முதல் உரும்பிராயில் உள்ள தனியார் காணி ஒன்றில் இன்று வரை இயங்கி வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 28 ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து பாடசாலை விடுவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் பாடசாலையை மீண்டும் தற்காலிகமாக ஒழுங்கமைத்து புனரமைக்க வேண்டியிருந்த காரணத்தால் கற்பித்தல் செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பமாகவில்லை.

பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், இராணுவத்தினரும் இணைந்து பாடசாலை ஒழங்கமைப்பு பணிகளை மேற்கொண்ட பின்னர் நேற்றைய தினம் தரம் 10, க.பொ.த சாதாரண தரம் , க.பொ.த உயர்தர வகுப்புக்கள் உள்ளடங்கலாக சுமார் 450 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இடப்பற்றாக்குறை காரணமாக 10 ஆம் ஆண்டுக்கு கீழ்ப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக உரும்பிராயில் உள்ள தற்காலிக பாடசாலையிலேயே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Saturday, October 9, 2010

திங்கள் முதல் சொந்த இடத்தில் பாடசாலை இயங்கும்

யா / வயாவிளான் ம. ம.வித்தியாலய த்துக்குரிய நிலம் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அண்மைய நாட்களாக அங்கு சிரமதானப் பணிகள் இடம்பெற்று வந்தன. இன்று சனிக்கிழமையுடன் (09-10-2010) சிரமதானப் பணிகள் ஓரளவு நிறைவுக்கு வந்துவிட்டதனால் இருக்கிற வளத்தை வைத்து வருகிற திங்கள் (11-10-2010) முதல் பாடசாலையின் ஒரு பகுதி மாணவர்கள் (ஆண்டு 10க்கு மேல்) சொந்த இடத்திலும் (வயாவிளானில்) மீதி மாணவர்கள் தற்போதுள்ள தற்காலிக பாடசாலையிலும் (உரும்பிராயிலும்) கல்வி கற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Wednesday, October 6, 2010

பாழடைந்து போயுள்ள வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம்; பாடசாலையின் நிலை கண்டு கண்ணீர் விட்டுக் கதறியழுத மாணவர்கள்!


யாழ். வசாவிளான் பகுதியில் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பாழடைந்து புதர்கள்,பற்றைகளுடனும், சிதிலமடைந்து போயிருக்கும் கட்டிடங்களுடனும் பழைய கால பிரமிட்டுக்களைப் போல் காட்சியளிக்கிறது.


முதலில் சென்று பாடசாலையை பார்த்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். இப்படித் தெரிவித்தார் பாடசாலையின் அதிபர் கனகராஜா.



வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம் கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளத் திறக்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பாடசாலையின் அதிபர் கனகராஜா தமிழ் சி.என்.என் செய்திப்பிரிவுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலிருந்து முக்கியமான விடயங்களைத் தொகுத்து தருகின்றோம்.


வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஆரம்பகாலம் தொட்டே ஏராளமான இடபெயர்வுகளை தொடர்ச்சியாகச் சந்தித்து வந்துள்ளது. பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்தாலும் உரும்பிராயில் உள்ள தனியார் காணியொன்றிலேயே பல வருடங்களாக இயங்கி வருகின்றது.

மிகக் குறுகிய இடத்தில் மிக நெருக்கமான வகுப்பறைகளுடன் 12 பரப்புக் காணியில் 1352 மாணவர்களுடன் ஒரு சிறைச்சாலை அல்லது அகதி முகாம் போலவே தற்போது இயங்குகின்றது. இனி வரப் போகின்ற பருவ மழைக் காலங்களில் மிகவும் சிரமம். வகுப்பறைகளில் வெள்ளம் புகுந்து விடும்...


ஆனால் வசாவிளானில் உள்ள பாடசாலையின் காணியோ 240 பரப்பு... யாழ் மாவட்டத்திலேயே அதிக பரப்பளவு காணியைக் கொண்ட பாடசாலையாகவும் பெரிய விளையாட்டு மைதானத்தைக் கொண்ட பாடசாலையாகவும் முன்னொரு காலத்திலேயே திகழ்ந்தது...

அந்த நிலை மீண்டும் விரைவில் வர வேண்டும்... இப்படியானதொரு சூழ்நிலையிலேயே கடந்த மாதம் 27 ஆம் திகதி ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்தது... படைத் தரப்பினரால் பாடசாலை சொந்த இடத்திற்க்குச் சென்று இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அன்றையதினம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாடசாலைச் சமூகமே மிகப்பெரிய சந்தோசத்தில் தங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக உணர்ந்தார்கள். அதற்கு அடுத்த நாள் அரச தரப்பினர் பாடசாலையை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்போவதாக தெரிவித்தார்கள்.

அதாவது செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி மீளத் திறப்பு விழா இடம்பெற்றது. இதில் அரச தரப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவர்கள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

வைபவ ரீதியாக பாடசாலை கையளிக்கப்பட்டு விட்டாலும் மிகப்பெரிய கவலை என்னவென்றால் துரதிஷ்டவசமாக தொடர்ச்சியாக பாடசாலையினை அங்கே நடாத்த முடியாமல் போய் விட்டது. ஒரு வகுப்பறை கூட ஒழுங்காக இல்லை.

குடிதண்ணீர் வசதி, மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட அங்கே இருக்கவில்லை. உண்மையிலேயே 1352 மாணவர்களுக்கும் 48 வகுப்பறைகள் தேவையாக உள்ளது.

வருகின்ற ஜனவரி மாதத்திற்க்கிடையில் சொந்த இடத்திற்கு பாடசாலையைக் கொண்டு செல்வதில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பாடசாலைச் சமூகமே முனைப்பாக இருக்கிறது. ஆனால் பாடசாலையின் நிலையோ வேறாக உள்ளது.

கட்டிடங்கள் எல்லாமே சேதமடைந்து பாழடைந்து போயுள்ளது. பற்றைகளும் புதர்களும் மண்டிக்கிடக்கிறது. பழைய காலப் பிரமிட்டுக்கள் போலக் காட்சியளிக்கின்றது. பாடசாலையைச் சென்று பார்த்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

எப்படியாவது பாடசாலையை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். பாடசாலை சமூகத்தோடு சேர்ந்து பழைய மாணவர் சமூகமும் இணைந்து பாடசாலையைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும்.

அப்போது தான் வேகமான பிரதிபலனை நாம் அனுபவிக்க முடியும். எவ்வளவு வேகமாக சொந்த இடத்தில் சென்று இயங்க வேண்டுமோ அவ்வளவு வேகமாக இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பாடசாலைச் சமூகம் எடுத்து வருகின்றது.

ஆனால் பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் பழைய மாணவர் சமூகம் தான் அதற்க்கான நிதியுதவிகளைத் தந்து உதவ வேண்டும். ஒவ்வொரு கட்டிடத்திற்க்குமான திட்டமிடல்கள் தயார் நிலையில் உள்ளன.

பணம் கையில் கிடைத்ததும் அபிவிருத்தி வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும். முழுமையான நேர்காணலையும் கேட்பதற்கு ஒலிப்பதிவைக் கேளுங்கள்

நன்றி: http://www.tamilcnn.com

Tuesday, October 5, 2010

இருபது ஆண்டுகளுக்குப் பின் வசாவிளான் ம.ம. வித்தியாலயம் திறப்பு

 யாழ் குடாநாட்டின் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகிய வலிகாமம் வடக்கில் உள்ள வசாவிளான் மகாவித்தியாலயம் இருபது வருடங்களுக்குப் பின்னர் இன்று செவ்வாய்கிழமை பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பாடசாலை இடம்பெயர்ந்த நிலையில் உரும்பிராய் பகுதியில் தனியார் காணியொன்றில் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிப்பாரற்று கிடந்த இந்தப் பாடசாலையில் வகுப்பறைகளோ வேறு அடிப்படை வசதிகளோ இல்லையென கூறும் அந்தப் பாடசாலையின் அதிபர் கந்தையா கனகராஜா அந்தப் பிரதேசம் காடாக காணப்படுவதாகத் தெரிவித்தார்.
 பாடசாலை தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும், பழைய இடத்தில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குக் குறைந்தது இன்னும் இரண்டு வாரங்களாவது எடுக்கும் எனவும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கான அடிப்படை வசதிகள் பல ஏற்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.



இந்தப் பாடசாலையின் அவசர திருத்த வேலைகளுக்கென வடமாகாண ஆளுநரினால் 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலையின் புனரமைப்பு பணிகளுக்கென வேறு நிதியுதவிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளதாகவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.